![]()

திரிபுவனவீரபுரம் எனும் சிற்றூர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் சாலியமங்கலத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூராகும்.
இவ்வூரில் திருமால் கோயிலும் பிடாரியுடன் கூடிய சிவன் கோயிலும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இங்குள்ள திருமால் கோயில் விக்ரம சோழ விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. சோழ நாட்டை கிபி 1118-1136 காலகட்டத்தில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்ரம சோழனால் உருவாக்கப்பட்ட திருமால் கோயில் அமைந்துள்ள இவ்விடம் விக்ரம சோழன் பெயரால் விக்ரம சோழன் விண்ணகரம் என்றே அழைக்கப்பட்டது.

விக்ரம சோழ விண்ணகரத்தில் கிடைத்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியரின் பத்தாம் ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டு கிபி 1325 ஆம் காலத்தை சேர்ந்ததாகும். இக்கல்வெட்டில் விக்ரம சோழ விண்ணகரத்தில் இருந்த கள்ளர் காவல் அமைப்பு மற்றும் இங்கு நிகழ்ந்த குழப்பங்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது.
இக்காலத்தில் திரிபுவனத்தில் குலமங்கல நாட்டாராகிய கள்ளர்கள் பெரும்பாடி காவல், களப்பாடி காவல் முதலிய காவல் பொறுப்புகளை வகித்து வந்துள்ளனர்.
ஊர்க்காவல் வரியாக கள்ளர் மக்கள் தலைக் கல்யாணத்திற்கு சேலை மற்றும் பல்வேறு காவல் வரிகளை பெற்று வந்துள்ளனர். இவ்வூரின் அரையர்களாகவும் கள்ளர்கள் இருந்து வந்ததை கல்வெட்டு உணர்த்துகிறது.

பெரும்பாடி காவல் என்பது பல ஊர்கள் சேர்ந்த நஞ்சை புஞ்சை போகங்களை காவல் செய்வதுடன் வரி இறைகளையும் சேர்த்து காவல் செய்யும் பெரும் காவல் பொறுப்பு ஆகும்.
உறுதிமொழி
**************
இவ்வூர் காவலுடைய கள்ளர் குல தலைவராக குலோத்துங்க சோழ மூவரையர் குறிப்பிடப்படுகிறார். இவர் சேனைப்பெருமாள் என குறிப்பிடப்படுகிறார். போர்படையான சேனையின் தலைவர் எனும் வகையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறார். மூவரையர்கள் இன்றும் தஞ்சையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இங்கனம் காவல் பொறுப்பில் உள்ள கள்ளர்கள் ஊரவரை தாக்குதல், கோயில்களை சேதப்படுத்துதல் முதலியவற்றை செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இந்த உறுதிமொழியை மீறினால் தங்கள் தலைவனான பாண்டியராருக்கு தீங்கு செய்ததற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ளனர். இங்கு பாண்டியரை தங்களின் தலைவர் என்றே கள்ளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள குளமங்கல நாட்டைச் சேர்ந்த கள்ளர்கள் காவல் பொறுப்புக்காக சாலியமங்கலம் அருகில் உள்ள திரிபுவனத்தில் காவல் பொறுப்பு மேற்கொண்டு குலோத்துங்க சோழ மூவரையர் தலைமையில் கள்ளர் படை நாடு காத்து வந்ததை கல்வெட்டு தகவல்கள் உணர்த்துகின்றன.
( கல்வெட்டு: 159 of 1911)
ஆவணம் 28, 2017
Topographic list of inscriptions vol 2
தொகுப்பு: இளையர் பெருமகன்

