![]()

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வையக்களத்தூர் சுண்டக்காடு கோயில் முன் நடப்பட்டுள்ள கல்வெட்டு சிவகங்கை சமஸ்தான ராணுவ பதவி அரிய தகவலை தருகிறது.
கிபி 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ” பட்டமங்கலம் நாட்டு மேலத்தெருவில் இருக்கும் கள்ளரில் சுண்டைக்காட்டூர் அமரம் வாச்ச மாகாளி சேர்வைக்காரன் குமாரன் அளகப்பன் ” அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது.
சிவகங்கை கள்ளர் நாடுகளில் ஒன்றான பட்டமங்கலம் நாட்டு மாவீரர் வைத்தியலிங்க தொண்டைமான் சிவகங்கை போர்களில் முக்கிய பங்காற்றினார். இவரது சிலை திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய புகழ்மிக்க பட்டமங்கலத்தில் மேலத்தெருவில் வசிக்கும் கள்ளரில் சுண்டைக்காட்டூர் அமரத்தை சேர்ந்தவராக மாகாளி சேர்வைக்காரர் குறிப்பிடப்படுகிறார். அமரம் எனும் சொல் பதினெட்டாம் நூற்றாண்டில் படைத்தளபதிகளுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதிகளை குறிக்கும். சிவகங்கை சமஸ்தானத்தில் படைத்தளபதியாக பணியாற்றிய வாச்ச மாகாளி சேர்வைக்காரர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அமரம் சுண்டக்காட்டூர் எனும் ஊராகும். இந்த அமரக்காரரின் மகன் அழகப்பன் அவர்களால் சுண்டக்காடு கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டு மூலம் சிவகங்கை சமஸ்தானத்தில் படைத்தளபதிகளாக பட்டமங்கல நாட்டு கள்ளர்கள் பணியாற்றியதையும், இவர்கள் சேர்வைக்காரர் பட்டம் பெற்று இருந்ததையும் அறிகிறோம்.
தொகுப்பு: இளையர் பெருமகன்

