![]()
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவகங்கை சமஸ்தான வரலாற்று நிகழ்வுகளை சமஸ்தான அறிஞர்களில் ஒருவரான முருகு என்பவர் ‘சிவகங்கைச் சரித்திரக் அம்மானை’ என்ற நூலாக எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த காலம் 1820-1840 ஆகும். இந்த சிவகங்கை வரலாற்று நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் சிவகங்கை சுற்றியுள்ள கள்ளர் நாடுகளின் படை பங்களிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை காண்போம்.
சேதுபதி மன்னருக்கு ஆதரவாக கப்பலூர் நாடு( கிபி 1772)
கிபி 1772 ல் ஆங்கில தளபதி ஸ்மித் தலைமையிலான படை இராமநாதபுரத்தை தாக்கிய போது அவருக்கு இராமநாதபுரத்துக்கு உதவியாக கப்பலூர் நாடு சென்றுள்ளது.
” இரவிகேசரி நாடும் யெண்வோண்ணா மன்னவரும் வெருவிச் சினந்து வெகுசேனை சூழ்ந்து வர கப்பலூர் நாடுங் கறுத்தக்கோட்டை நாட்டவரும் தளத்துடனே”( சிவ அம் பக் 109)
என கப்பலூர் நாட்டார் படை உதவி அளித்ததை விளக்குகிறது.
முத்துவடுகநாதரை காக்க களம் கண்ட கள்ளர் நாடுகள்( 21 Jun 1772)
இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ள நாடுகளை பற்றி அம்மானை பாடுகிறது.
“கண்டதேவி நாட்டு கனமான மன்னவரும் வண்டரெழுவங்கோட்டை மன்னருடன் கண்டமாணிக்கம் கனநாட்டு இராணுவமும் துண்டரிக்க னான துரை பாகனிச் சனமும் பட்டமங்கல நாட்டு பலசனங்கள் மெத்தவுமாய் திட்டமுட னாயுதங்கள் சேர்க்கை வெகு வாகவுமே, பள்ளத்தூர் நாடும், பாலைய நாட்டாரும் கள்ளற் சிலகுடியுங் காவலராரும் , நேரிய போரில் நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம் தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்” (சிவ அம் பக் 122)
கண்டதேவி நாட்டார்கள், கண்டர்மாணிக்கம் நாட்டார்கள், பாகனேரிச் சனமும், பட்டமங்கல நாட்டார்களும், பள்ளத்தூர் நாடு, பாலையூர் நாடு, கள்ளர் காவல்காரர்களும், மல்லாக்கோட்டை நாட்டு சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க உதவியுள்ளனர்.
கணவரை இழந்த வேலுநாச்சியாருக்கு மேலூர் நாட்டார்கள் நம்பிக்கை அளித்தல்
முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின்பு மருது சகோதரர்களுடன் வேலுநாச்சியார் ஐதரை சந்திக்க செல்லும் போது மேலூரை அடைகிறார். அங்கு மேலூர் நாட்டார்கள் ராணியை வணங்கி, ஐதர் படையுடன் சென்று சீமையை மீட்போம் என உறுதி கூறினர்.
” மேலூர் விடியவந்து விடுதி யிறங்கலுற்றார், இங்குமே லூரில் வந்து இவர்களும் விடுதி தேடி தங்கிவீற் றிருக்கும் போதில் சங்கையை முழுது நன்றாய் அங்குள்ள நாட்டார் கூடி அறிந்துவந் தவர்பால் சென்று மங்கையு மரசர்தம்மை வணங்கியே நின்றதோர் நாட்டாரெல்லாம் இன்றுநா மயிதர் பேட்டி எடுத்துமே தளத்தை கூட்டி வென்று நவாப்பை ஒட்டி மீட்போம்“( சிவ அம் பக் 134)

சிவகங்கையை மீட்க வேலுநாச்சியாருக்கு உதவிய கள்ளர் நாடுகள்( கிபி 1780)
கிபி 1780 ல் ஐதர் அலியின் படை உதவியை பெற்ற வேலுநாச்சியார் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து சீமை மீட்க புறப்பட்டபோது அவருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர்நாடுகள் மற்றும் தலைவர்கள்
” தாட்சிணிய மில்லாச் சனமும் விருதுடனே நாச்சியப்பன் சேர்வையும் “வெகு கள்ளர் பெருஞ்சமுங் கடுங்கோபமுள்ளவர்கள் மல்லாக்கோட்டை நாட்டவரும், சேதுபதியம்பலம் தீரனவன் சனமும், பேதகமில்லா பெரியபிள்ளை அம்பலமும் , துடியன் வயித்தியலிங்க தொண்டைமான் தன்சனமும், மருவத்த மன்னன் மா வேலி வாளனுடன் வெரிமருது சேர்வை”( சிவ அம் பக் 150-151)
வேலுநாச்சியாருக்கு ஆதரவாக மல்லாக்கோட்டை நாட்டை சேர்ந்த நாச்சியப்பன் சேர்வை போரிட்டுள்ளார். இவரது சமாதி ஏரியூர் கக்குளக்கண்மாய் கரையில் உள்ளது. கள்ளர் பெருஞ்சனமும் திரண்டுள்ளது, மல்லாக்கோட்டை நாட்டார்கள், மல்லாக்கோட்டை நாட்டு வீரர் சேதுபதியம்பலம், பெரியபிள்ளையம்பலம், பட்டமங்கல நாட்டு வீரர் வயித்திலியங்க தொண்டைமான்( திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோயிலில் இவரது சிலை உள்ளது), மா வேலி வாளன்( வாளுக்கு வேலி) முதலானோர் வீரப்போர் புரிந்துள்ளனர்.
இராமநாதபுர மன்னர் சிவகங்கையை தாக்கியபோது உதவிய கள்ளர் நாடுகள் (கிபி 1794)
கிபி 1794ல் ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதி படமாத்தூர் கவுரி வல்லபதேவருக்கு ஆதரவாக இராம்நாடு படையை அனுப்பி ஒரு சகோதர யுத்தத்தை நடத்தினார். அந்த போர் ஆனந்தூர் எனும் இடத்தில் நடந்தது. இப்போரில் மருதுபாண்டியருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் நாடுகள்:-
” சமத்தான் தைரியவான் நாச்சியப்பன் சேர்வை நானூறு தளமதுவும்
பெருமைமிகு பெரும்பாலைய நாடும், மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும், ஏரியூர் நாடும், எண்ணவொண்ணா மன்னவரும் முத்துநல்ல நாட்டவரும், முனைவீரமுள்ள திருப்பத்தூர் நாட்டவரும், பூரவரும் சிறுகுடி நாட்டவரும் “ ( சிவ அம் பக் 172-174)
மல்லாக்கோட்டை நாச்சியப்பன் சேர்வை, தலைமையிலான நானூறு பேர் கொண்ட படையும், பாலையூர் நாட்டவரும், மாசற்ற மல்லாக்கோட்டை கள்ளர்களும், ஏரியூர் நாட்டாரும், முத்து நாட்டு கள்ளர்களும் திருப்பத்தூர் மற்றும் சிறுகுடி நாட்டு கள்ளர்களும் மருதுபாண்டியருக்கு ஆதரவாக ஆனந்தூர் போரில் களம் கண்டுள்ளனர்.
இவ்வாறு சிவகங்கை சமஸ்தானத்தின் ஆபத்துக்காலங்களில் தக்க சமயத்தில் படைதிரட்டி வந்த கள்ளர் நாடுகள் சிவகங்கை சமஸ்தானத்துக்கு காவல் அரண்களாக இருந்துள்ளன.
தொகுப்பு: இளையர் பெருமகன்



